மக்களுக்காகவே நான் என்று சொன்னவர் ஜெயலலிதா... அவருடைய சொத்தை மக்களுக்காகப் பயன்படுத்தலாமே... உயர் நீதிமன்றம் கேள்வி!

By Asianet TamilFirst Published Aug 30, 2019, 10:22 PM IST
Highlights

தீபா தரப்பு பதிலளிக்கும்போது, ஜெயலலிதாவின் சொத்துகளில் சில பகுதிகளை பொது பயன்பாட்டுக்குத் தருவதில் ஆட்சேபம் இல்லை எனவும், ஆனால், தன்னை போயஸ் கார்டன் வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். போயஸ் கார்டன் வீடு உள்பட ஜெயலலிதாவின் சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.” என தீபா கூறினார். 

 'மக்களால் நான்; மக்களுக்காகவே நான்’ எனக் கூறிய ஜெயலலிதாவின் சொத்தின் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாது? என தீபா, தீபக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏராளமான சொத்துகள் இருப்பதாகவும், அந்தச் சொத்துகளை நிர்வகிக்க அதிகாரியை நியமிக்க கோரி சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வி விசாரித்துவருகிறது. கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக நேரில் விளக்கும்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவுக்கும் தீபக்குக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

 
அதன்படி அவர்கள் இருவரும் இன்று நேரில் ஆஜராகினார்கள். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவுக்கு இரண்டாம் நிலை வாரிசுகள் இருந்தபோதும் அதிகாரியை நியமிக்கலாம் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மக்களால் நான்; மக்களுக்காக நான் எனக் கூறிய ஜெயலலிதாவின் சொத்தின் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு தீபக் தரப்பு பதிலளிக்கும்போது, வாரிசு சான்று கோரி தான் விண்ணப்பித்திருந்ததால், தன்னை நிர்வாகியாக நியமிக்க கோரி வழக்கு தொடர காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார். தீபா தரப்பு பதிலளிக்கும்போது, ஜெயலலிதாவின் சொத்துகளில் சில பகுதிகளை பொது பயன்பாட்டுக்குத் தருவதில் ஆட்சேபம் இல்லை எனவும், ஆனால், தன்னை போயஸ் கார்டன் வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். போயஸ் கார்டன் வீடு உள்பட ஜெயலலிதாவின் சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.” என தீபா கூறினார். 
ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளை அனுமதிக்காதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது குறித்து பதில் அளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கின்  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

click me!