
Pawan Kalyan questions MK Stalin One Nation One Election scheme: தமிழ்நாடு பாஜக சார்பில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான கருத்தரங்க கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார்.
சென்னையில் பவன் கல்யாண் பேச்சு
இந்த கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண் தமிழ் கடவுளின் முருகனின் தமிழ்நாடு எனக்கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து தமிழில் பேசிய பவன் கல்யாண், ''தமிழகம் வள்ளுவனின் பூமி, நான் வணங்கும் தமிழ்க் கடவுள் முருகனின் பூமி, மகாகவியின் பூமி, சித்தர்களின் பூமி, எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆரின் பூமி. எனக்கு எப்போதும் தமிழ்நாட்டின் மீது நல்ல மதிப்பு உண்டு'' என்று தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்
தொடர்ந்து பேசிய அவர், ''ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சிலர் இரட்டை வேடம் போடுகின்றனர். மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பதுபோல் சிலர் பேசுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வந்திருந்தால் ஆதரவு தெரிவித்து இருப்பார்கள். தாங்கள் ஜெயித்தால் வாக்குப்பதிவு இயந்திரம் சூப்பர் என்று சொல்பவர்கள், தோற்றால் அதில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறுகிறார்கள்'' என்று கூறினார்.
கருணாநிதி ஆதரித்தார்! ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்?
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக பேசிய பவன் கல்யாண், ''ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆதரவு தெரிவித்தார். ஆனால் அவரது மகன் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தை படிக்க வேண்டும். ஏனெனில் கருணாநிதி நெஞ்சுக்கு நீதியில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை ஆதரித்து குறிப்பிட்டு இருக்கிறார். '' என்று கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தலால் என்னென்ன பலன்கள்?
ஒரே நாடு ஒரே தேர்தலின் பயன்கள் குறித்து பேசிய பவன் கல்யாண், ''அடிக்கடி தேர்தல் நடப்பதால் நமது நாடு நாடு எப்போதும் தேர்தல் பணிகளில் முடங்கி உள்ளது. இதனால் அதிகாரிகள், போலீசார் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி செய்யும் நிலை உள்ளது. மேலும் தேர்தல் செலவுகளால் மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மூலம் தேர்தல் செலவுகளை குறைக்க முடியும். மக்களுக்கு கூடுதலாக திட்டங்களை நிறைவேற்ற முடியும்'' என்று பேசினார்.