தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் திடீர் மறியல்

By Asianet TamilFirst Published Jul 18, 2019, 11:36 AM IST
Highlights

மின்சார ரயில்கள் தாமதாக இயக்கப்படுவதை கண்டித்து செங்கல்பட்டு, பாலூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மின்சார ரயில்கள் தாமதாக இயக்கப்படுவதை கண்டித்து செங்கல்பட்டு, பாலூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, அத்திவரதரை தரித்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத் காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதனால் சென்னை - செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில் சேவை குறைக்கப்பட்டது. மேலும் ரயில்கள் தாமதமாகவும் இயக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மின்சார ரயில் தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர், தண்டவாளத்தில் படுத்து கொண்டனர். இதையொட்டி ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பயணிகள், அத்திவரதர் வைபத்தை முன்னிட்டு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு குறைவான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டால், நாங்கள் எப்படி வேலைக்கு சென்று வர முடியும். எனவே சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல், பாலூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரயில் நிலைய அதிகாரிகள்அங்கு சென்று, தினமும் இயக்கப்படும் ரயில்கள் பாதிக்கப்படாமல் காஞ்சிபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சரக்கு ரயில்களின் நேரத்தை மாற்றி இயக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் ரயில்களும், எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும் தாமதமாக சென்றனர். பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

click me!