அனல் மின் நிலையத்தில் தீ விபத்து… - ராட்சத பிளாஸ்டிக் குழாய் எரிந்து நாசம்

By Asianet TamilFirst Published Jul 18, 2019, 11:21 AM IST
Highlights

எண்ணூரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அனல் மின் நிலையம் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசமானது.

எண்ணூரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அனல் மின் நிலையம் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசமானது.

எண்ணூர் அனல் மின் நிலையம் சுமார் 3,250 கோடி செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு லேன்கோ நிறுவனம் மூலம் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்றது.

ஆனால் பல்வேறு காரணங்களால் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த எண்ணூர் அனல் மின் நிலையத்தில் உள்ள எந்திரங்களை குளிர்விப்பதற்காக கடலுக்குள் இருந்து கடல் நீர் கொண்டு செல்லும் பணிக்காக ராட்சத பிளாஸ்டிக் பைப்புகள் கொண்டுவரப்பட்டது.

ஆனால் பணிகள் நின்று விட்டதால் அந்த பிளாஸ்டிக் பைப்புகள் அனைத்தையும் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 10 வது தெரு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான காலி மைதானத்தில் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ராட்சத பிளாஸ்டிக் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு திடீரென்று தீ பற்றி கொண்டது. காற்று சற்று பலமாக இருந்ததால் தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதில் 150அடி நீளமுள்ள 100க்கும் மேற்பட்ட ராட்சத பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டது.

இதனால் அருகில் குடியிருப்புகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் குடியிருப்புகளை விட்டு பொதுமக்கள் பீதி அடைந்து வெளியே ஓடி வந்தனர் இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

திருவொற்றியூர்,எண்ணூர், தண்டையார்பேட்டை,மணலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் பைப்புகள் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். அதே நேரத்தில் திடீரென்று மழை பெய்ததால் படிப்படியாக போராடி விடியற்காலை 5 மணிக்கு தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைப்புகளும் எரிந்து நாசமானது. மேலும் இந்த தீ விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், வடிவேலு உள்பட பலரது வீடு மற்றும் குடிசைகளில் வெப்பம் தாக்கம் காரணமாக வீட்டில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள். ஏ. சி. மிஷின்கள். மற்றும் மின் சாதன பொருட்கள் கருகியது. மரங்களும் தீயில் கருகின. அருகில் இருந்த பள்ளியில் கரும்புகை படிந்ததால் நேற்று விடுமுறை விடப்பட்டது . இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் பைப்புகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்புகளில் பரவியது. இதனால் அப்பகுதியில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளை சாத்தி விட்டு குடும்பத்துடன் வெளியே ஓடிவந்தனர். இதை பயன்படுத்தி கொண்ட சமூக விரோதிகள் சிலர் அப் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது வீட்டில் நுழைந்து வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் நகை 25 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமாகி மொட்டை மாடியில் இருந்த பலரது வீடுகளில் சிமெண்டு ஓடுகள் நாசமாயின. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதவரம் வருவாய் துறையினர் தமிழக அரசின் நிவாரண உதவிகள் வழங்க முடியாது என்று மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு நிவாரணத்தொகை வழங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

click me!