
தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தொற்றின் தீவிரம் புரியாமல் மக்கள் தேவையில்லாமல் வெளியே சுத்தியதால் காய்கறி, மளிகை பொருட்களை வாங்க நண்பகல் 12 மணி வரை கொடுக்கப்பட்ட அனுமதியும், காலை 10 மணியாக குறைக்கப்பட்டது.
ஊரடங்கை மீறி வெளியில் சுத்தும் நபர்களை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்துள்ளனர். காலை 10 மணிக்கு மேல் இ-பதிவு இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் படி நேற்று ஒரே நாளில் மட்டும் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 18 ஆயிரத்து 374 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 9 லட்சத்து 96 ஆயிரத்து 601 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நேற்று மட்டும் 1627 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 36 ஆயிரத்து 649 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.