அதிர்ச்சி செய்தி.. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பயிற்சி டாக்டர்கள் உள்பட 42 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி

By vinoth kumarFirst Published Dec 28, 2021, 12:19 PM IST
Highlights

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது  மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த நோயாளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பயிற்சி மருத்துவர்கள் உள்பட 42 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமிக்ரான் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. முதன் முதலில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இதன் பாதிப்பு தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 21 மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 653ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 100க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் 34 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதனால், ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா, உத்தரப் பிரதேசம்,  மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது  மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த நோயாளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த வார்டில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள், நர்சிங் மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என கடந்த 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 68 பயிற்சி மருத்துவர்கள், 227 நர்சிங் மாணவிகள், 60 துப்புரவு பணியாளர்கள் உள்பட 3,370 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

இந்த 60 பேரில் 7 பயிற்சி மருத்துவர்கள், 7 நர்சிங் மாணவர்கள், 3 செவிலியர்கள், 1 முதுகலை மருத்துவ படிப்பு மாணவர், 1 துப்புரவு பணியாளர்கள், அந்த கட்டிடத்தில் சிகிச்சை பெற்ற 23 நோயாளிகள் என மொத்தம் 42 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு ஒமிக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 42 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனே மற்றும் ஐதரபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு மரபணு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

click me!