
சென்னையில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கும் ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முதலில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இதன் பாதிப்பு தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 415ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38, தமிழகத்தில் 34 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கும் ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து 3,038 பேருக்கு பரிசோதனை செய்ததில் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 39 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு ஒமிக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, ஒமிக்ரான் வேகமாக பரவுவதால் வீட்டில் இருந்த படியே புத்தாண்டு கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.