திருப்பதி ஏழுமலையானிடம் பழைய கணக்குகள் ஒப்படைப்பு

By Asianet TamilFirst Published Jul 18, 2019, 1:18 PM IST
Highlights
திருப்பதி கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையானிடம் பழைய கணக்குகள் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பதி கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையானிடம் பழைய கணக்குகள் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாள் பரக்காமணி என்று சொல்லக்கூடிய உண்டியல் காணிக்கை எண்ணும் இடத்தில் பழைய கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்குகள் தொடங்கப்படுவது வழக்கம். அக்காலத்தில் மாதத்திற்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வந்தது. இதில் ஆடி மாதம் முதல் நாள் வருடம் முழுவதும் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் வரவு, செலவு கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது நாளுக்கு நாள் பெருகி வரும் பக்தர்கள் கூட்டத்தால் ஒரு நாளைக்கு 2 கோடி முதல் 4 கோடி வரை காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் தினந்தோறும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது. மேலும் வருடாந்திர பட்ஜெட் மார்ச் மாதம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இருப்பினும் சம்பிரதாய முறைப்படி செய்யப்படக்கூடிய ஆனிவார ஆஸ்தானம் என்னும் புதிய கணக்கு தொடங்கும் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு நேற்று ஏழுமலையான் கோயிலில் ஜெயபேரி, விஜயபேரி துவார பாலகர்கள் அருகே சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கொலு வைக்கப்பட்டு வரவு, செலவு கணக்குகள் படித்து காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு நெய்வேத்தியம் வைத்து, உற்சவருக்கும், மூலவருக்கும் புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு 3 டன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானத்தின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

அவ்வாறு நேற்று பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ரங்கநாதர் கோயிலில் இருந்து விஷ்ணு சகஸ்ரநாமத்துடன் கூடிய பட்டு வஸ்திரங்களை இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் அபூர்வா சர்மா, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், தகவல் துறை ஆணையாளர் பிரதாப் குமார் தலைமையில் கொண்டு வரப்பட்டு பெரிய ஜீயர் மடத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதிகளில் யானைகள் அணிவகுத்து செல்ல நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டியிடம் வழங்கப்பட்டது.

இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் தர்மாரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

click me!