சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு தாமதம்

By Asianet TamilFirst Published Jul 18, 2019, 1:15 PM IST
Highlights

சந்திர கிரகணத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நேற்று 30 நிமிடம் தாமதமாக திறக்கப்பட்டது.

சந்திர கிரகணத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நேற்று 30 நிமிடம் தாமதமாக திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆடி மாத பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நேற்று முதல் ஆடி மாத சிறப்பு பூஜைகள் தொடங்கியது.

வழக்கமாக மாத பூஜைகளின்போது தினமும் காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். ஆனால் நேற்று அதிகாலை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், 30 நிமிடம் தாமதமாக காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பம்பை ஆறு திசைமாறி ஓடியதில் பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் சேதமடைந்தன. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்து பம்பைக்கு பக்தர்களின் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

பம்பையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கல் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் பக்தர்கள், ேகரள அரசு பஸ்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், பம்பையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், பக்தர்களின் வாகனங்களை பம்பைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில், மாத பூஜைகளின்போது மட்டும் பம்பைக்கு பக்தர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து வாகனங்கள் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்பட்டன. நேற்று ஆடி 1ம் தேதி என்பதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அதிகம் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர்.

click me!