#BREAKING தொட்டலே உதிரும் தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... அரசு அதிரடி..!

By vinoth kumar  |  First Published Aug 20, 2021, 11:11 AM IST

சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய கட்டிட விவகாரம் தொடர்பாக உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கேபி பார்க் குடியிருப்பு கட்டிடம் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் கட்டிடத்தின் சுவர்கள், லிப்ட், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதிலமடைந்து மோசமாக இருப்பதாக அங்குக் குடியிருப்பவர்கள் கூறினர்.  இது தொடர்பாக அமைச்சர்கள் அன்பரசன், சேகர் பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், ஐஐடி நிபுணர் குழுவும் ஆய்வு செய்துள்ளனர். 

Latest Videos

இந்நிலையில், சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடைபெற்றபோது பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “தொட்டால் சிணுங்கி போல் தொட்டால் விழும் கட்டடத்தை அதிமுக கட்டியுள்ளது. புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் மிக வேகமாக கட்டப்பட்டு இருக்கிறது. கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறது. கடந்த  ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை. இதேபோல், புளியந்தோப்பு கட்டட ஒப்பந்ததாரர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன், கட்டுமானப் பணியில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

click me!