ஆர்வம் காட்டாத மக்கள்.. இன்னும் 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 16, 2021, 11:49 AM IST
Highlights

 டெங்கு தடுப்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

32 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் அதன் விகிதம் அதிகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- மருத்துவ கல்லூரிகள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எல்லா மாணவர்களுக்கும் ஆர்டிபிசி பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர். பரிசோதனை முடிவுகள் வரும் வரை சில மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பாண்டே மாணவர் சேர்க்கை நடத்த வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், 32 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் அதன் விகிதம் அதிகமாக உள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள 15 மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. 2ம் தவணை செலுத்தியவர்களின் பட்டியலை வைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

கடந்த 2 வாரங்களாக 2000 அளவிலேயே தினசரி கொரோனா பாதிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்னும் 6 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில்  மதம் சார்ந்த மற்றும் குடும்ப நிகழ்வுகளில் கூட்டம் கூடுவதால் கொரோனா வேகமாக பரவுகிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தியாகராயநகர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் கடைகளை மூலம் சூழலை பொதுமக்கள் ஏற்படுத்தக்கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

click me!