இனி அரசு பஸ்ஸில் ஓசி பயணம் கூடாது... போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு..!

By Asianet TamilFirst Published Jul 23, 2021, 9:15 PM IST
Highlights

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் போலீஸார் பயணிக்கக் கூடாது என்று தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
 

 கடந்த 2019-இல் திருச்சியிலிருந்து கடலூர் சென்ற அரசுப் பேருந்தில் சீருடை அணியாமல் பயணம் செய்த போலீஸ் ஒருவர், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார். இதுதொடர்பாக அவருக்கும் நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடத்துநர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் விவகாரமானது.
இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் அந்த உத்தரவின் பேரில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்துப் பிரிவு போலீஸாருக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில், “இனி வரும் காலங்களில் ஏற்கனவே நடந்த மோதல் சம்பவம் போல் நடக்காமல் இருக்க அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் போலீஸார் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீஸாரும் கடைப்பிடிக்க வேண்டும். அதை அந்தந்தத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்” என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


பொதுவாக போலீஸார் அரசுப் பேருந்தில் பணி நிமித்தமாகப் பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு பதில் வாரண்ட் உள்ளது என்று சொன்னால் அதை நடத்துநர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், சில போலீஸார் சொந்த வேலையாகச் செல்லும்போதும், சீருடை அணியாமல் செல்லும்போதும் நடத்துநர்களிடம் போலீஸ் எனக் கூறினால், நடத்துனர்கள் டிக்கெட் கேட்காமல் விட்டுவிடுவார்கள். ஆனால், அன்றைய தினம் அதற்கு மாறாக வாக்குவாதம் நடந்ததால், இந்த விவகாரம் விபரீதமானது குறிப்பிடத்தக்கது.

click me!