அடுத்த 3 மணி நேரம்.. எங்கெல்லாம் மழை கொட்டும்.? வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்த எச்சரிக்கை.!

By Asianet TamilFirst Published Nov 7, 2021, 8:32 PM IST
Highlights

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 26 அன்று தொடங்கியது. அப்போது முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை விடியவிடிய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை கொட்டியது. குறிப்பாக சென்னையில் ஒரே நாள் இரவில் சுமார் 25 செ.மீ. மழை பதிவானது. இதனால், சென்னை வெள்ளக்காடானது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்  கனமழையால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. 

சென்னையில் தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மிகக் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனால், இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மற்ற மாவட்டங்களில் விடுமுறை அளிப்பதைப் பற்றி மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் இரவு 7.30 மணியளவில் தமிழகத்தில் மழை நிலவரம் பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை அடுத்த மூன்று மணி நேரத்தில் பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது. 

click me!