திருமணத்தில் விருப்பம் இல்லாததால் சந்தியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமாகி ஒரு வாரம் ஆவதால், ஆர்.டி.ஒ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
திருமணமான ஒரே வாரத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
சென்னை அம்பத்தூர் அடுத்த வடக்கு கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம்மன் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் கவிதா. இவரது மகள் சந்தியா (22) பி.காம் முடித்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத கோச்சிங் சென்டரில் படித்து வந்தார். இவரது வீட்டில் உறவினரான சேலத்தை சேர்ந்த ராஜா (26), தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார்.
undefined
இந்நிலையில், சந்தியாவை, ராஜாவுக்கு திருமணம் செய்ய கவிதா முடிவு செய்தார். அதன்படி, 2020ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சந்தியா- ராஜா இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றது. ஆனால், சந்தியா, ஆவடியை சேர்ந்த ரஞ்சித் என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும் இதற்கு தாய் கவிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
புதுப்பெண் தற்கொலை
இந்நிலையில், கடந்த 4ம் தேதி சந்தியா- ராஜா திருமணம் சேலத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, ராஜா- சந்தியா ஆகியோர் கொரட்டூருக்கு திரும்பினர். கடந்த 7ம் தேதி சந்தியா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், திருமணத்தில் விருப்பம் இல்லாததால் சந்தியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமாகி ஒரு வாரம் ஆவதால், ஆர்.டி.ஒ விசாரணையும் நடைபெற்று வருகிறது.