கொரோனா 3-வது அலையை தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி.. திருமண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.!

By vinoth kumarFirst Published Jun 17, 2021, 9:42 AM IST
Highlights

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களிடம் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், நுழைவாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைத்து அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து அனுமதிக்க வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.  

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், கோயில்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை  மாநகராட்சியின் இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என ஆணையர்  ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். 

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடனான ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் நேற்று  ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் வணிக வரித்துறை  செயலாளர் சித்திக், கூடுதல் காவல் ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் விஷூ  மகாஜன், துணை ஆணையர் பிரசாந்த், வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.  இதில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ளுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை  என அவ்வப்போது மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளன.  அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை  மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும். 

 மேலும், திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களிடம் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், நுழைவாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைத்து அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து அனுமதிக்க வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.  

சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது கலந்துகொள்பவர்கள் அனைவரையும் சமூக இடைவெளியுடன் அமரவும் மண்டப உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும். மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விவரங்களை கொண்டு வருவாய் துறையை சார்ந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என கள ஆய்வு மேற்கொள்வார்கள்.  கள ஆய்வின்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை எனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

click me!