நீட் தேர்வு விவகாரம்... தமிழக அரசின் முகத்திரையை கிழித்த மத்திய அரசு...!

By vinoth kumarFirst Published Jul 16, 2019, 5:08 PM IST
Highlights

நீட் தொடர்பான தமிழக அரசின் மசோதா 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியே திருப்பி அனுப்பப்பட்டது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

நீட் தொடர்பான தமிழக அரசின் மசோதா 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியே திருப்பி அனுப்பப்பட்டது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

2017- 18-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன் இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் மற்றும் கஜேந்திரபாபு உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த மனுவில் நாடாளுமன்ற குழு பரிந்துரைப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே தங்கள் சொந்த நடைமுறையை பின்பற்றி கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். மேலும், தமிழகத்தில் இதற்கு கிளம்பிய கடுமையான எதிர்ப்பின் காரணமாக, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31–ம் தேதி நீட் தேர்விலிருந்து  விலக்கு அளிப்பதற்காக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளதாகவும், அவற்றை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதனிடையே, சட்டப்பேரவையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக திமுக கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை, நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றார். எனினும், மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம். நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீட் விலக்கு மசோதா 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என மத்திய உள்துறை அமைச்சகம் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அப்படி என்றால் ஸ்டாலின் கூறியதை போல நீட் விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் தமிழக அரசு மறைத்திருக்கிறது. 

click me!