சபரிமலைக்கு ஹெலிகாப்டர் வசதி - தேவசம் போர்டு புதிய திட்டம்

By Asianet TamilFirst Published Jul 16, 2019, 1:13 PM IST
Highlights

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நடக்கும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு குவிவார்கள்.

 

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நடக்கும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு குவிவார்கள்.

மேலும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சபரிமலை சென்று சாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.

தற்போது ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக நெடுவஞ்சேரி விமான நிலையம் அருகே உள்ள காலடி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு உள்ளது.

காலடியில் இருந்து பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வரை செல்லலாம். இதற்கான பயண நேரம் 35 நிமிடங்கள் ஆகும். இதற்காக காலடியில் இருந்து நிலக்கல்லுக்கும், நிலக்கல்லில் இருந்து காலடிக்கும் தினமும் 6 முறை ஹெலிகாப்டர் சென்று வரும் வகையில் தேவசம்போர்டு ஏற்பாடு செய்து வருகிறது.

காலை 7 மணிக்கு முதல் ஹெலிகாப்டர் பயணம் தொடங்கும் மாலை 4.15 மணியுடன் ஹெலிகாப்டர் சேவை நிறைவடையும்.

வரும் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த காலத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கும் விதத்தில் இந்த பணிகள் விரைவாக நடந்து வருகிறது. நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந்தேதி வரை ஹெலிகாப்டர் சேவை நடைபெறும் விதத்தில் திட்ட மிடப்பட்டு உள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்ய பக்தர்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்வது என்பது பற்றி தேவசம் போர்டு இன்னும் முடிவு செய்யவில்லை.

click me!