ஓராண்டிற்கு மேலாக இழுத்தடித்த தமிழக அரசு.. சாதித்து சிலையை மீட்ட பொன்.மாணிக்கவேல்.. 37 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வருகிறது!!

By Asianet TamilFirst Published Sep 12, 2019, 3:39 PM IST
Highlights

நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன நடராஜர் சிலை பல வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டிருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கிறது கல்லிடைக்குறிச்சி நகரம். இங்கு குலசேகரமுடையார் சமேத அறம்வளர்த்த நாயகி அம்பாள் கோவில் இருக்கிறது. இது நூற்றாண்டு பழமையான கோவிலாகும்.

கடந்த 1982 ம் ஆண்டு இந்த கோவிலின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த நடராஜர் சிலை கடத்தப்பட்டது. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட இந்த சிலை திருட்டு வழக்கு, பின்னர் 1984 ம் ஆண்டு சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே இந்த வழக்கை கையிலெடுத்த சிலைதடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு, தற்போது அந்த நடராஜர் சிலையை கண்டுபிடித்துள்ளனர். 37 ஆண்டுகளுக்கு முன் குலசேகரமுடையார் கோவிலில் இருந்து காணாமல் போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருக்கும் அருங்காட்சியகத்தில் இருந்து சிலைதடுப்புப் பிரிவு மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வழக்கிற்கு எந்தவித ஒத்துழைப்பும் இல்லாமல் நீண்ட போராட்டத்திற்கு பிறகே சிலை மீட்கப்பட்டுள்ளதாக சிலைதடுப்புப் பிரிவு சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலையை ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக்கொண்டாலும் தமிழக அரசின் அனுமதிக்காகவும் விமான செலவினை ஏற்பதற்காகவும் 300 நாட்களுக்கும் மேலாக காத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அருங்காட்சியக நிர்வாகி ராபின்சன் தனது சொந்த செலவில் சிலையை இந்தியா அனுப்பியுள்ளார். அதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக நாளை சென்னை வர இருக்கிறது.

click me!