பணம்,நகைகளோடு தவறவிடப்பட்ட சூட்கேஸ்.. நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்.. காவல்துறை பாராட்டு!!

By Asianet TamilFirst Published Sep 12, 2019, 2:07 PM IST
Highlights

சென்னையில் ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட சூட்கேஸை ஆட்டோ ஓட்டுநர் நேர்மையாக செயல்பட்டு காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலக காலனி அருகே வசிப்பவர் பத்மநாபன். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் பார்த்து வருகிறார். தினமும் அந்த பகுதியில் வரும் பயணிகளை தனது ஆட்டோவில் ஏற்றி அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்வார்.

இந்த நிலையில் அவரது ஆட்டோவில் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் பயணித்துள்ளார். ரயில் நிலையம் வரை பயணம் செய்த அவர் பின்னர் இறங்கி சென்று விட்டார். ரயிலில் ஏறிய பின்னர் தான் தனது சூட்கேசை ஆட்டோவில் தவறவிட்டது அப்பெண்ணிற்கு  நினைவிற்கு வந்திருக்கிறது.

இதனால் பதறிப்போன அவர் உடனடியாக தனது உறவினரை தொலைபேசியில் அழைத்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தனது ஆட்டோவில் சூட்கேஸ் ஒன்று தவறுதலாக கிடப்பதை பார்த்த பத்மநாபன் அதிர்ச்சியடைந்து அதை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவலர்கள் அதை திறந்து பார்த்த போது அதில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம் ஆகியவை இருந்தது.

அதைத்தொடர்ந்து சூட்கேசை தவறவிட்டதாக புகார் அளித்த பயணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.காவல் நிலையம் வந்த அவர் தனது சூட்கேசை சரி பார்த்தார். நகை மற்றும் பணம் அனைத்தும் அப்படியே இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஏழ்மை நிலையிலும் நேர்மையாக செயல்பட்டு சூட்கேசை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.

click me!