#BREAKING நாளுக்கு நாள் எகிறும் பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்? அவசர ஆலோசனை..!

By vinoth kumarFirst Published Apr 15, 2021, 11:26 AM IST
Highlights

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. இதனால், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் ரத்து, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, ஆட்டோக்களில் இரண்டு பேர்கள் மற்றும் கார்களில் மூன்று பேர்கள் மட்டுமே செல்ல அனுமதி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்த போதிலும் பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

அதேபோல், கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கிய நிலையில் முதல் நாளான நேற்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று வெறும் 75,000 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்களிடம் ஆர்வமில்லாத நிலையே தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், தடுப்பூசி அதிகரிப்பது குறித்தும்  தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

click me!