சென்னை மாநகராட்சியை விட மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு குறைவான சதவீத அளவில்தான் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சொத்து வரி உயர்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சொத்து வரி உயர்வு
மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையமானது தமது அறிக்கையில், நடப்பு ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் வகையில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டு தோறும் சொத்து வரியினை உயர்த்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இந்தநிலையில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக, எவ்வித உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து, செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
undefined
எனவே, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், சொத்து வரியை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீத உயர்வும், 601 - 1,200 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் உயர்வு என்றும், 1,201- - 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதம் உயர்வு, 1,800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு 100 சதவீதம் உயர்வு என்று அறிவிக்கப்பட்டது.
குளறுபடி
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் சென்னை மாநகராட்சியை விட மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு குறைவான சதவீத அளவில்தான் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னையில் 150 சதவீதம் வரி உயர்ந்த கட்டடங்களுக்கு, மற்ற நகரங்களில் 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இந்த அளவில் கணக்கிட்டாலும், சென்னையை விட மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. உதாரணமாக, 1998ல் சென்னையில் ஒரு கட்டடத்துக்கு 4,000 ரூபாய் சொத்து வரி உயர்த்திய கட்டடத்துக்கு, இப்போது 150 சதவீதம் வரி உயர்வால், 10 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டியுள்ளது.
பாரபட்சம்
ஆனால், கோவையில் 1998ல் 4,000 ரூபாய் வரி செலுத்திய கட்டடத்துக்கு, 2008ம் ஆண்டில் 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டதால், கடந்த 14 ஆண்டுகளாக 8,000 ரூபாய் வரி செலுத்தப்படுகிறது. அதற்கு, இப்போது 100 சதவீத வரி உயர்வால், 16 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பாரபட்சத்தை இப்போதே களைய வேண்டும் என பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்தபட்சம் சில ஆண்டுகளுக்கு, சென்னை தவிர்த்த பிற நகரங்களில் சொத்துவரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்; அல்லது அதற்கேற்ப வரி உயர்வை மற்ற நகரங்களில் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.