நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள்... எவற்றுக்கெல்லாம் அனுமதி தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published May 4, 2021, 10:49 AM IST
Highlights

புதிய கட்டுப்பாடுகளின் படி தமிழக அரசு எவற்றை எல்லாம் இயங்க அனுமதித்துள்ளது என பார்க்கலாம்... 

தமிழகத்தைப் பொறுத்தவரை தீயாய் பரவி கொரோனா 2வது அலையை சமாளிப்பதற்காக மே 1ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  தமிழக அரசு வரும் மே 6-ம் தேதி காலை 4 மணி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

மளிகை கடைகள், பலசரக்கு கடைகள் ஆகியன 12 மணி வரை மட்டுமே இயக்கலாம். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் 12 மணிவரை செயல்படலாம். உணவகங்கள், தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

புதிய கட்டுப்பாடுகளின் படி தமிழக அரசு எவற்றை எல்லாம் இயங்க அனுமதித்துள்ளது என பார்க்கலாம்... 

அனுமதிக்கப்பட்டவை: 

1. அவசரத் தேவைகளுக்கு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் செல்ல வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணிகள், செய்தித் தாள் விநியோகம், பால் விநியோகம், சரக்கு வாகனங்கள் , எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின்போது இயங்க அனுமதிக்கப்படும்.

2. ஊடகத் துறையினர் இரவிலும் பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3. பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படலாம்.

4. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (Continuous Process Industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities) இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இரவில் இந்த தொழிற்சாலைகளுக்கு பணிக்குச் செல்பவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

5. தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் இரவிலும் செயல்படலாம்.

6. கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

7. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் பத்து மணி வரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை அனுமதிக்கப்படுகிறது.

8.Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

8. முழு ஊரடங்கு நாட்களில் மின் வணிக நிறுவன சேவைகளுக்கு அனுமதி இல்லை.

9.  முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர்
 எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்)  நடத்துவதற்கும் தடையுமில்லை.

10.தரவு மையங்களில் (Data Centres) பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கும் அனுமதி. 

11.ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி.

12. இறைச்சி விற்பனைக்கு சனி, ஞாயிற்று கிழமைகளில் அனுமதி இல்லை. மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படலாம்.
 

click me!