யானைகள் வழித்தட வழக்கு... கோவை ஆட்சியருக்கு கெடு விதித்து ஐகோர்ட் அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 1, 2021, 1:24 PM IST
Highlights

யானைகள் வழித்தடமான கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கற்சூளைகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் வழித்தடமான கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கற்சூளைகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அமைந்துள்ள உரிமம் இல்லாத செங்கற்சூளைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி, தடாகம் உள்ளிட்ட யானைகள் வழித்தடங்களை ஆய்வு செய்த  தாசில்தாரர், செங்கற்சூளைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து செங்கற்சூளை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். விசாரணையின் போது, தமிழ்நாடு கனிம வள முறைப்படுத்தல் சட்டப்படி, செங்கற்சூளைகளை மூடும்படி உத்தரவிட  மாவட்ட ஆட்சியருக்கு தான் அதிகாரம் உள்ளதாகவும், தாசில்தாரருக்கு அதிகாரமில்லை எனவும்  செங்கற்சூளை உரிமையாளர்கள் சார்பில் வாதிடப்பட்டது.உரிமங்களை புதுப்பிக்க உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்த போதும், அவற்றை கிடப்பில் போட்டு விட்டு, சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அதேசமயம், தமிழக அரசுத்தரப்பில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில் தாசில்தாரர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் வாதிடப்பட்டது.உரிமங்களை புதுப்பிக்க கோரி கட்டணம் செலுத்தியுள்ளதால், உரிமம் இன்றி செங்கற்சூளைகள் நடத்துவதற்கு மனுதாரர்கள் உரிமை கோர முடியாது எனவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தமிழ்நாடு கனிம வள முறைப்படுத்தல் சட்டப்படி, செங்கற்சூளைகளை மூடிம்படி உத்தரவிட மாவட்ட ஆட்சியருக்கு தான் அதிகாரம் உள்ளது எனக் கூறி, தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.அதேசமயம், சட்டபப்டி அதிகாரம் உள்ளா மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட செங்கற்சூளை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்து நான்கு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, உரிமம் இல்லாத செங்கற்சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

click me!