
பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகளை செய்து கொடுக்க, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன், அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, மனைவி கிருத்திகா மட்டும் ஜாமீனில் விடுதலையானார். மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால் அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகளை செய்து கொடுக்க 3 லட்சம் ரூபாய் அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ரூ.25,000 பணத்தை ஜி பே மூலம் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பிய தகவலும் வெளியாகி உள்ளது. வைரலாகி வரும் ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.