
சென்னையில் உள்ள பிரபல உணவகத்தின் சாப்பாட்டில் பல்லி இருந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியடையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் கடந்த 4 ஆண்டுகளாக காரைக்குடி செட்டிநாடி மெஸ் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. பிரபலமான ஹோட்டல் என்பதால், எந்நேரமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பர். இந்நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கி(34), அவரது நண்பர்கள் மூன்று பேர் உணவகத்திற்கு சென்றனர்.
முதலில் வெள்ளை சாதம் போட்டுள்ளனர். அதற்கு பிறகு சாம்பார் ஊற்றி உள்ளனர். அந்த சாம்பாரில்தான் பல்லி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டவுடன், அந்த உணவகத்தினர் மீதமிருந்த மற்ற சாப்பாடுகளை கீழே கொட்டிவிட்டனர்.
இதுகுறித்து இசக்கி அளித்த புகாரின் அடிப்படையில் பல்லாவரம் நகராட்சி அலுவலக சுகாதார அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இசக்கி, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உணவக மேலாளர் தர்மதுரை என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.