கொரோனாவின் ஏஜெண்டாகிப்போன கோயம்பேடு.. சென்னையை கடந்து மற்ற ஊர்களுக்கும் பாதிப்பை பரப்பிய கொடுமை

By karthikeyan VFirst Published May 2, 2020, 3:22 PM IST
Highlights

கோயம்பேடு மார்க்கெட் தொடர்பில் இதுவரை தமிழகம் முழுவதும் 88 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 

தமிழ்நாட்டில் இதுவரை 2526 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1312 பேர் குணமடைந்துள்ளனர். 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக இருக்கிறது. சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது.

ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளன. எனவே தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னை தான் பெரும் சவாலாக திகழ்கிறது. 

எனவே சென்னையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படுவதுடன் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குல் வந்ததும், அதிகமானோர் குணமடைவதும் ஆறுதல் செய்தியாக இருந்துவந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுவதும் பலருக்கு கொரோனா பரவியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் உட்பட  மொத்தம் 88 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் ஒன்று. எனவே அங்கிருந்து கொரோனா வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்பதால் தான் மக்கள் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. தனிமனித இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடமும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டது. 

கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 88 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து ஊர் திரும்பியவர்கள் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடைய 50 பேருக்கு சென்னையில் தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து அரியலூருக்கு சென்ற 19 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே ஆரஞ்சு மண்டலமாக இருந்த அரியலூர் சென்ற 40க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல கோயம்பேட்டிலிருந்து கடலூருக்கு சென்றவர்களில் 9 பேருக்கும் விழுப்புரத்தில் இருவருக்கும் பெரம்பலூர் சென்ற ஒருவருக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், கோயம்பேட்டிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு திரும்பியவர்களில் கணிசமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!