தற்போது தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது. சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தபோதும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு உச்சமடைந்து இருக்கிறது. இதனிடையே நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது 4ம் கட்டத்தை எட்டியுள்ளது.
மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது. எனினும் பாதிப்புகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைகளில் மாநில அரசுகள் தளர்வுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும் 25 மாவட்டங்களில் போக்குவரத்து உள்ளிட்ட விதிகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்பின் இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று குளிர்சாதன வசதி இல்லாமல் சலூன் கடைகள் மற்றும் அழகு சாதன நிலையங்கள் செயல்பட அறிவிப்பு வந்தது. அதிலும் சென்னை மாநகரத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது. சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் எனவும் வேலை இடத்தில் முகக்கவசம் அணிந்து சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்கவும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.