'பிள்ளைகளை தொந்தரவு செய்யாதீங்க'..! தலைவிரித்தாடிய கடன்தொல்லையால் தற்கொலை செய்த வயதான தம்பதி உருக்கம்..!

By Manikandan S R SFirst Published Nov 8, 2019, 3:33 PM IST
Highlights

சென்னை அருகே தீராத கடன்தொல்லையால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் சந்திரன்(64). இவரது மனைவி விஜயலட்சுமி(60). இந்த தம்பதியினருக்கு ஹரிபிரசாத் என்கிற மகனும், ராதிகா என்கிற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் குடும்பத்துடன் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனால் சந்திரனும் அவரது மனைவியும் மட்டும் வீட்டில் வசித்துள்ளனர். இவர்களின் வீட்டில் சந்திரா என்கிற பெண் வேலைபார்த்து வந்துள்ளார். தினமும் வீட்டிற்கு வந்து சமையல் முதலான வேலைகள் செய்து விட்டு செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல சந்திரா வீட்டு வேலைகள் பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது விஜயலட்சுமியின் வீட்டு கதவு திறந்தே இருந்துள்ளது. இதனால் உள்ளே சென்ற அவர் விஜயலட்சுமியை அழைத்துள்ளார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து படுக்கை அறையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு விஜயலட்சுமியும் அவரது கணவர் சந்திரனும் நைலான் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். இதைப்பார்த்து சந்திரா அலறியுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் அதிகமான கடன் தொல்லையால் இருவரும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. சந்திரனும் அவரது மனைவியும் தூக்கிட்ட அறையை காவலர்கள் சோதனை செய்து பார்த்தனர். அப்போது மகன், மகள் மற்றும் காவல்துறையினருக்கு எழுதிய கடிதங்கள் கிடைத்தது.

அதில், வாங்கிய கடனுக்கு வட்டியாக மாதம் தோறும் 1 லட்சத்திற்கு அதிகமாக செலுத்தி வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து வட்டியையும் அசலையும் செலுத்த முடியாத காரணத்தால், தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் கடன் கொடுத்தவர்கள் தங்கள் மகன் மற்றும் மகளை தொல்லை செய்ய வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர். சந்திரன் முதலில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது குடும்பம் நன்றாக வசதியாக இருந்திருக்கிறது. பின்னாளில் அதிகமான நஷ்டம் ஏற்படவே வெளியில் கடன் வாங்கியுள்ளார். ஒருகட்டத்தில் கடனை கட்ட முடியாமல் போகவே சொந்த வீட்டை கடன் கொடுத்தவர்களிடம் விட்டுவிட்டு வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியாமல் தவிக்கவே மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: தொலைந்தது ஸ்ரீரங்கம் கோவிலின் அடையாளம்..! அறங்காவலர்கள் அடாவடி..! அர்ச்சகர் ரங்கராஜன் கொந்தளிப்பு..!
 

click me!