பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு... சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 21, 2021, 6:59 PM IST
Highlights

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அவசியம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள், நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரணை நடைபெற வேண்டுமென கூறி வழக்கை முடித்து வைத்தனர். 

கரூரில் முதலமைச்சர் பாதுகாப்பிற்கு சென்ற பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. பாலியல் புகார் அளிக்க சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி எஸ்.பி. கண்ணனுடன் சேர்த்து கூண்டோடு காவலர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ் திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

​சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.-யான கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில், பாலியல் குற்றச்சாட்டுக்கு  ஆளான கூடுதல் டிஜிபி, ஏற்கனவே இதேபோல வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்றும், தொடர்ந்து இதேபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும்  குற்றம்சாட்டப்பட்டவரை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மீதான புகாரை மாநில காவல்துறையான சிபிசிஐடி விசாரித்தால், அவர் மீது மென்மையான அணுகுமுறையையே கையாள்வார்கள் என்றும், வழக்கை வாபஸ் பெறும்படி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து, அவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள்  எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிபிசிஐடி விசாரணை தொடங்கிய நிலையிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தொடர்ந்து சிபிசிஐடி விசாரித்தால் முறையாக இருக்காது எனக் கூறியுள்ள மனுதாரர், பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார். 

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த வழக்கு ஏப்ரல் 30ம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். தனி நீதிபதி கண்காணித்து வருவதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அவசியம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள், நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரணை நடைபெற வேண்டுமென கூறி வழக்கை முடித்து வைத்தனர். 

click me!