4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 25, 2019, 2:45 PM IST
Highlights

தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் நீடித்து வந்தது. இதனால் சில இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது.  இதனால் வெப்பசலனம் ஏற்பட்டு வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 3 செ.மீ., வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவாலா, காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் சத்யபாமா பல்கலைக்கழகம், தரமணி, மகாபலிபுரம், சென்னை விமான நிலையம், சிவகங்கை, தேவக்கோட்டை, திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆகிய இடங்களில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

click me!