கொட்டித் தீர்க்கும் கனமழை... 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. உங்கள் மாவட்டம் இருக்கிறதா.?

By Asianet TamilFirst Published Nov 3, 2021, 8:03 AM IST
Highlights

தீபாவளி விடுமுறைக்குப் பிறகு இனி இந்த மாவட்டங்களில் 8-ஆம் தேதிதான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 16 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.  தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரிக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும் எனவும், காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

அதன்படி தமிழகத்தின் உள் மாட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என எல்லாப் பகுதிகளிலும் லேசானது முதல் மிக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீரால், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார்கள். 

அதன்படி சென்னை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல், திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு இனி இந்த மாவட்டங்களில் 8-ஆம் தேதிதான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!