கன்னியாகுமரியில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்... வானிலை ஆய்வு மையம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 26, 2021, 7:22 PM IST
Highlights

அடுத்த இரு தினங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 

வெப்பச்சலனம் காரணமாக  இன்று தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 


அடுத்த இரு தினங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று ஒருசில நேரங்களில் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்றும், நாளையும்  குமரிக்கடல் , மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55  கிலோமீட்டர் வேகத்தில்வீசக்கூடும் என்றும், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில்வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும், இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும் மீனவர்கள்  வரும் 30ம் தேதி வரை தேதிகளில் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

click me!