உயர்நீதிமன்ற நீதிபதி கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். இதனையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
யார் இந்த கங்கா பூர்வாலா?
1962ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி பிறந்தவர் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா. 1985ம் ஆண்டு தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். தொடர்ந்து, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பாம்பே மெர்சண்டைல் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். இதனையடுத்து, கடந்த 2010-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதி கங்கா பூர்வாலா சட்டப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியிலும், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.