LockDown: கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. தமிழகத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கு? செளமியா கூறுவது என்ன?

By vinoth kumarFirst Published Jan 9, 2022, 7:10 AM IST
Highlights

டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடுகையில், ஒமிக்ரான் பரவல் வேகம் நான்கு மடங்கு அதிகரித்தாலும், மருந்து சிகிச்சைக்கான தேவை குறைவாக உள்ளதால், தமிழகத்திற்கு முழு ஊரடங்கு தேவைப்படாது. தற்போதைய சூழலில், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொது மக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் போதுமானது.

தற்போதைய சூழலில், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொது மக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் போதுமானது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை, செளமியா சுவாமிநாதன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய  செளமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில்;- கொரோனா தொற்றின் முதல் அலையில், தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தெரியாத சூழலில், பொது முடக்கம் தேவைப்பட்டது. தற்போது, உலக முழுதும் மருத்துவ கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது முழு முடக்கம் தேவையில்லை.

டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடுகையில், ஒமிக்ரான் பரவல் வேகம் நான்கு மடங்கு அதிகரித்தாலும், மருந்து சிகிச்சைக்கான தேவை குறைவாக உள்ளதால், தமிழகத்திற்கு முழு ஊரடங்கு தேவைப்படாது. தற்போதைய சூழலில், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொது மக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் போதுமானது.

மேலும், 3வது அலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் உயிர் இழப்பு பெரிய அளவில் கண்டறியப்படவில்லை. தடுப்பூசி செலுத்துவதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. எனவே, வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் கட்டாயம் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. வருங்காலங்களில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொற்றா நோய்களை கண்டறியும் விதமாக, தமிழக அரசின் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்திற்கு என் பாராட்டுக்கள்.

தடுப்பூசி செலுத்துவதால், பொது மக்களுக்கு நிலையான எதிர்ப்பாற்றல் உருவாகினாலும், தொடர்ந்து வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து வருகின்றன. அதனால், கொரோனா வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

click me!