மாணவி பிரியாவுக்கு மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், பணியில் இருந்த செவிலியர், சுழற்சி முறையில் இருந்த மருத்துவர்கள் அனைவருமே கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பப்படும்.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்கு மருத்துவர்களின் தவறே காரணம் என்பது உறுதியாகியுள்ளது. ஆகையால், மருத்துவர்கள் 2 பேர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியாவுக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவி பிரியாவுக்கு கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தவறான சிகிச்சையால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கால்கள் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 15-ம் தேதி சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு நடத்திய ஆய்வில் மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவக்கல்வி இயக்குனநருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்நிலையில், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174ன் கீழ் பெரவள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பிரியாவின் மரணம் தொடர்பாக மருத்துக்கல்வி இயக்குநரகத்துக்கு பெரவள்ளூர் காவல்துறையினர் கடிதம் அனுப்பினர்.
undefined
இந்நிலையில், மாணவி பிரியா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவக் குழுவின் அறிக்கையை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவருடைய கால் அகற்றப்பட்டு பின்னர் அவர் உயிரிழந்தற்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக் குறைவே காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.
மேலும், மாணவி பிரியாவுக்கு மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், பணியில் இருந்த செவிலியர், சுழற்சி முறையில் இருந்த மருத்துவர்கள் அனைவருமே கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பப்படும். இந்த சம்மனுக்கு ஆஜராகவில்லை என்றால் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.