இந்தத் தொலைபேசி எண்ணில் தெரிஞ்சுக்கலாம்... வீடு தேடி வரும் நடமாடும் காய்கறி, பழக் கடைகள்..!

By Asianet Tamil  |  First Published May 24, 2021, 9:49 AM IST

தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரங்கு அமலாகியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 4380 நடமாடும் காய்கறி, பழங்கள் அங்காடியை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
 


தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி கடைகள் கூட இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் காய்கறி, பழங்களை தெருக்களுக்கே கொண்டு சென்று விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில், “ தமிழ்நாட்டில் உள்ள மக்கள்தொகை சுமார்7 கோடி. காய்கறி மற்றும் பழங்கள் தேவை தினந்தோறும் சுமார் 18 ஆயிரம் மெட்ரிக் டன் என எதிர்பாக்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை தினந்தோறும் 1,500 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைப்படும். சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 2,770 வாகனங்கள் மூலம் 2,228 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வினியோகம் செய்யப்படும். தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகம் தொடர்பான தகவல் தெரிந்துகொள்ள 044 22253884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இப்பணிகளை கண்காணித்திட தலைமையகத்தில் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகத் தொடரை மேலும் விரிவுபடுத்திட நின்சாகார்ட், வே கூல், பழமுதிர் நிலையம், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் இணையம், அஹிம்சா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றையும் ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 194 குளிர்பதன இடங்கள் 18,527 மெட்ரிக் டன் கொள்ளளவில் உள்ளன. அதில் தற்பொழுது சுமார் 3 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே விளை பொருட்கள் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

மீதமுள்ள சுமார் 15,527 மெட்ரிக் டன் கொள்ளளவை அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.
உள்ளாட்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவையை பூர்த்தி செய்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் விரிவான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடமாடும் காய்கறி அங்காடி வருகை, விலை குறித்த தகவல்களை 9499932899 எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
 

click me!