இளஞ்சிவப்பு பட்டு உடுத்திய அத்திவரதர் தரிசனம்… - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

By Asianet TamilFirst Published Aug 6, 2019, 2:06 AM IST
Highlights

அத்திவரதர் நேற்று, நின்ற கோலத்தில் மெஜந்தா நிறத்தில் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியிளத்தார். கடந்த 36 நாட்களில் 49 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் நேற்று, நின்ற கோலத்தில் மெஜந்தா நிறத்தில் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியிளத்தார். கடந்த 36 நாட்களில் 49 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி, வரும் 17ம் தேதிவரை நடக்கிறது. வைபவம் தொடங்கிய நாள் முதல் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து கடந்த 36 நாட்களில் 49 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

பக்தர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசனம் செய்ய, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில், குடியரசுத் தலைவர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அத்திவரதர் நேற்று மெஜந்தா நிற பட்டு உடுத்தி பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் காஞ்சிபுரத்தின் எல்லைகளில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட்டு, வெளியூரில் இருந்து வரும் கார், பஸ் உள்பட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தி, இணைப்பு பஸ்கள் மூலம் அனுப்பினர்.

காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி புறவழிச்சாலை பகுதியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் வழக்கமாக காஞ்சிபுரம் வரும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். மாணவர்கள் நேரத்துக்கு பள்ளி செல்ல முடியாமலும், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.

கீழம்பியில் இருந்து சுமார் 4 கிமீ தூரம் உள்ள காஞ்சிபுரம் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அண்ணா தெருவில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கவைக்கப்பட்டனர்.

மேலும் கோயில் வளாகத்துக்கு சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரிசையில் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் ஓரளவுக்கு பக்தர்கள் நெரிசலை சமாளித்து விரைவாக தரிசனம் செய்தனர்.

click me!