முதியோர் இல்லமாக மாறி வரும் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம்

By Asianet TamilFirst Published Aug 6, 2019, 1:54 AM IST
Highlights

முதியோர் இல்லமாக மாறிவரும், கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முதியோர் இல்லமாக மாறிவரும், கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு, கூடுவாஞ்சேரியில், ஜிஎஸ்டி சாலையோரம் ₹2 கோடி மதிப்பில் நவீன பஸ் நிலையம் கட்டப்பட்டது. இங்கு சென்னை, தாம்பரம், கோயம்பேடு, தி.நகர், பிராட்வே உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 75க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள், இங்கு வந்து செல்கின்றன. இதனால், இங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகளவில் காணப்படும்.

இங்கு, நவீன கட்டண கழிப்பிடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தம், பயணிகள் தங்கும் வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, இந்த பஸ் நிலையம் முதியோர் இல்லமாக மாறி வருகிறது. இதனால், இங்கு வரும் பஸ் ஏற வரும் பயணிகள், கடும் அவதிப்படுகின்றனர்.

இதுபற்றி போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த பஸ் நிலையத்துக்கு உலகம் தரம் வாய்ந்த ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டது. ஆனால், அதனை முறையாக பயன்படுத்த அதிகாரிகள் முன்வரவில்லை என புகார் எழுந்துள்ளது.

தற்போது இந்த பஸ் நிலையத்தில் ஏராளமான முதியோர்கள் தங்களது துணி, மணி, துடைப்பம், பாத்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களுடன் தஞ்சமடைந்துள்ளனர். அங்குள்ள அலமாரிகளிலும், பயணிகள் உட்காரும் இருக்கையின் கீழ் பகுதியிலும் வைத்து மாதக்கணக்கில் தங்கியுள்ளனர்.

அதே நேரத்தில், சில குடிமகன்கள், மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறியதும் இந்த பஸ் நிலையத்தில் வந்து, பயணிகள் அமரும் இருக்கையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மழை மற்றும் வெயில் நேரங்களில் உட்கார இடமில்லாமல் கடும் சிரமம் அடைகின்றனர்.

click me!