மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மின்சார கம்பங்கள், மரங்கள் ஆங்காங்கே வேரோடு சாய்ந்துள்ளன.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மின்சார கம்பங்கள், மரங்கள் ஆங்காங்கே வேரோடு சாய்ந்துள்ளன. இதனால், சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 7ம் தேதி காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுபெற்றது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய மாண்டஸ் புயல் அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- முழுமையாக கரையை கடந்த மாண்டஸ் புயல்.. மழை தொடருமா? வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்.!
மரங்கள் வேரோடு சாய்ந்தன
பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. சென்னையில் கோபாலபுரம், அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்தும், வேரோடும் சாய்ந்தது. மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 5000 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு
சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், சென்னை, அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் போக்குவரத்து
சென்னையில் இரவு இயக்கப்படும் மாநகராட்சி பேருந்துகளின் இரவு சேவை நிறுத்தப்பட்டன. மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு, சென்னை போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
விமான சேவையில் மாற்றம்
மாண்டஸ் புயல் எதிரொலியாக நள்ளிரவில் சென்னை வந்த 7 விமானங்கள் ஐதராபாத், பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 20 விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- புயல் எச்சரிக்கை.! மொட்டை மாடிக்கு செல்ல கூடாது! திறந்த வெளியில் செல்பி எடுக்க கூடாது- தமிழக அரசு எச்சரிக்கை