சென்னையில் மிக்ஜாம் புயலின் கோரதாண்டவத்தால் கனமழை கொட்டி வரும் நிலையில், நாளை சென்னையில் அரசு விடுமுறை விடப்படுமா என்பது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளன. சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர இந்த கனமழையால் சென்னையில் புறநகர் ரயில் சேவை மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
கனமழையால் தத்தளிக்கும் சென்னையில் மக்களுக்கு உதவ பிரத்யேக கட்டுப்பாட்டு மையமும் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள இந்த ஆய்வு மையத்தில் தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மழை தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதோடு இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதை போல் நாளையும் விடுமுறை விடப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், புயல் இன்று கரையை கடந்துவிடும் என்பதால் நாளை விடுமுறை அளிக்க வேண்டிய தேவை இருக்காது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... துரத்தும் புயல்... மிரட்டும் கனமழை - 20 விமானங்கள் ரத்து... சென்னையில் ஸ்தம்பித்து போன விமான சேவை