‘அந்த விஷயத்தில் நாங்க உத்தரவு போட முடியாது’... மத்திய, மாநில அரசுகளை கைகாட்டிய ஐகோர்ட்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 28, 2021, 5:26 PM IST
Highlights

கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பும்படி தனியார் தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கொரோனா தொற்றும், அதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் ஊரடங்கு காரணமாக மக்கள் தீவிரமான மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டுள்ளார். சக மனிதர்களால் புறக்கணிக்கப்படுவதால், கொரோனா தொற்று பாதித்தவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்குவதாகவும், சமூக வலைதளங்களில் கொரோனா பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா குறித்த உண்மை தகவல்களை இணையதளங்களில் வெளியிட்டால் மட்டுமே மக்கள் மனதில் உள்ள அச்ச உணர்வை போக்க முடியும் என்பதால், இரவு 7 மணி முதல் 8 மணி வரையோ அல்லது 8 மணி முதல் 9 மணி வரையோ ஒரு மணி நேரம் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கொரோனா குறித்த அறிவுரைகள், தடுப்பூசி, சிகிச்சை, உணவு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தனியார் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்த முடியாது எனவும், செய்தித் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை கொரோனா குறித்த செய்திகளை ஒளிபரப்பாமல் தப்ப முடியாது எனவும், செய்திகளில்  ஏதேனும் தவறு இருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஏற்கனவே விழிப்புணர்வு செய்திகளை ஒளிபரப்பி வருவதாகவும், தடுப்பூசி போடும்படி மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள்,  பொது நலனைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது குறித்து மத்திய – மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

click me!