
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. இதனால், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் ரத்து, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, ஆட்டோக்களில் இரண்டு பேர்கள் மற்றும் கார்களில் மூன்று பேர்கள் மட்டுமே செல்ல அனுமதி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்த போதிலும் பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த தெரு முழுவதையும் மாநகராட்சி நிர்வாகம் அடைந்து வருகிறது. தற்போது சென்னையில் அப்படி கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே சென்னையில் கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.200ம், பொது இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், எச்சில் துப்பினாலும் ரூ.500ம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களை கண்காணிப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2 லட்சத்து 61 ஆயிரத்து 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 10 ஆயிரத்து 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.