சென்னையில் சலூன் கடைக்காரருக்கு கொரோனா... சமூக பரவல் அச்சத்தில் தமிழகம்..?

By vinoth kumarFirst Published Apr 26, 2020, 2:34 PM IST
Highlights

சென்னையில் நெற்குன்றத்தில் சலூன் கடை நடத்தி வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் நெற்குன்றத்தில் சலூன் கடை நடத்தி வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் வசித்து வந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உலக முழுவதும் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் சென்று வரும் சூழ்நிலை ஏற்பட்டது, அப்படி இருந்த போதிலும் நாளுக்குநாள் தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. 

இதுவரை வெளிநாடு சென்று வந்தவர்கள், டெல்லி மாநாட்டிற்கு கலந்து கொண்டவர்களுக்கும் மட்டுமே பரவிய வைரஸ்,  தற்போது யாரிடமும் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால் சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.  இதுவரை தமிழகத்தில் 1,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகப்படியாக சென்னையில் மட்டும் 495 பேர் பாதிப்படைந்துள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் நெற்குன்றத்தில் சலூன் கடை நடத்தி வந்தவருக்கு கொரோனா இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவருடைய மனைவி, மகன் ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சலூன் கடைக்கு வந்து சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் குறித்து விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். அப்பகுதியில் சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் சலூன் கடைக்கு முடி வெட்டச் சென்ற 6 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!