சென்னையில் அதிர்ச்சி... காவல்துறையில் புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று... மகேஷ்குமார் அகர்வால் தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 13, 2021, 3:03 PM IST
Highlights

பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அகற்றக் கூடாது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அகற்றக் கூடாது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டையில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா தொற்றுப் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் மக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இப்போது, அவர்களுக்கு கொரோனா குறித்து தெரிந்திருக்கிறது. இருந்தாலும், மக்கள் சோர்வடைந்திருக்கின்றனர்.

பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அகற்றக் கூடாது. அப்போதுதான் நாம் கொரோனா தொற்றைத் தடுக்க முடியும். காவல்துறை தரப்பில் இதுவரை சுமார் 3,300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிதாக சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

காவல்துறையில் சுமார் 7,000 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நேற்று மட்டும் 700 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் வைத்துள்ளனர். ஆனால், அதனை அணியமாட்டார்கள். நாம் எச்சரித்தால்தான் போடுகின்றனர் என மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

click me!