சொல்பேச்சை கொஞ்சம் கூட கேட்காத மக்கள்.. தமிழ்நாட்டில் ஆரம்பமானது சமூக தொற்று..?

By karthikeyan VFirst Published Apr 29, 2020, 7:59 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புள்ள யாருடனும் தொடர்பில் இல்லாதவர்களுக்கும் தொற்று உறுதியாகியிருப்பதால் சமூக தொற்று ஆரம்பித்துவிட்ட அபாயம் உள்ளது.
 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை தொடர்ச்சியாக தாறுமாறாக அதிகரித்து கொண்டிருந்தது. மிகவும் குறைவானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோதிலும், மார்ச் மாத இறுதி முதல் ஏப்ரல் 12 வரை பாதிப்பு அதிகமாக உறுதியானது. 

ஆனால் ஏப்ரல் 13லிருந்து பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட அதேவேளையில் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது. ஏப்ரல் 13லிருந்து ஒருசில நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக தினமும் 70க்கு கீழ் தான் இருந்தது. தினமும் சராசரியாக 6500க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை பெரியளவில் இல்லாமல் கட்டுக்குள் இருந்தது. 

அதிலும் குறிப்பாக ஒரு நாளைக்கு பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை பாதிக்கும் மேல் அல்லது 80-90% சென்னையில் தான் பாதிப்பு உறுதியானது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா உறுதியான 121 பேரில் 103 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இன்று கொரோனா உறுதியான 104 பேரில் 94 பேர் சென்னை. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் தான் உள்ளது. அதேவேளையில் அதிகமானோர் தமிழ்நாட்டில் குணமடைந்துவந்தது நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்தது. 

இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2162 பேரில் 1210 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 922 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா சமூக தொற்றாக மாற தொடங்கியுள்ளது.

இதுவரை கொரோனா உறுதியானவர்களுக்கு யாரிடமிருந்து அல்லது எவ்வாறு தொற்றியிருக்கக்கூடும் என்பதை கண்டறிய முடிந்தது. ஆனால் அந்த கட்டத்தை கடந்து, கொரோனா பாதிப்புள்ளவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கும் பயண பின்னணி எதுவும் இல்லாதவர்களுக்கும் சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எனவே தமிழ்நாட்டில் சமூக தொற்று தொடங்கிவிட்டது என்பதைத்தான் இந்த தகவல் பறைசாற்றுகிறது. கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சமூக விலகலை கடைபிடிப்பது ஒன்றே வழி என்பதால் தான், பொருளாதார இழப்பையும் ஏற்றுக்கொண்டு, மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

ஆனாலும் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சுமார் 25-30% மக்கள் பொறுப்பில்லாமல் அலட்சியத்துடன் வெளியே சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது. அதன் விளைவாகக்கூட, கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறியிருக்கலாம். பயண பின்னணியோ, கொரோனா தொற்றுள்ளவர்களுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பில்லாதவர்களுக்கும் சென்னையில் கொரோனா உறுதியாகியிருப்பது, சமூக பரவல் தொடங்கிவிட்டதை பறைசாற்றுகிறது. இனியாவது மக்கள், அரசாங்கத்தின்  உத்தரவை ஏற்று அதன்படி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 

click me!