தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எப்போது கட்டுக்குள் வரும்..? தலைமை செயலாளர் தகவல்

By karthikeyan VFirst Published Apr 10, 2020, 7:04 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், எப்போது கட்டுக்குள் வரும் என்று தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு மளமளவென உயர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 900ஐ கடந்துவிட்டது. 

நேற்றுவரை 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைக்கு 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. 

இந்நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சண்முகம், தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு எப்போது கட்டுக்குள் வரும் என தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய தலைமை செயலாளர் சண்முகம், தமிழ்நாட்டில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ள  77 பேர், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த 834 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது பயண பின்னணி கொண்டவர்கள் தானே தவிர, தமிழ்நாட்டிற்குள் இருந்து புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. 

தமிழ்நாட்டில் கொரோனா இன்னும் சமூக தொற்றாக பரவவில்லை. பயண பின்னணி கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குத்தான் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே இரண்டாம் கட்டத்தில் தான் இருக்கிறோம். மூன்றாம் கட்டத்திற்கு இன்னும் செல்லவில்லை என்பதை தலைமை செயலாளர் உறுதிப்படுத்தினார்.

தமிழ்நாட்டில் தடுப்பு பணிகள் மிகவும் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை பரிசோதிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. சமூக தொற்றாக பரவாததால், அவர்களை எல்லாம் பரிசோதித்து முடித்தவுடன் இன்னும் சில நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துவிடும் என்றார்.
 

click me!