குலுங்கியது சென்னை... திரும்பிய பக்கமெல்லாம் வானவேடிக்கை வெடிச்சத்தம்.!

By Asianet TamilFirst Published Nov 4, 2021, 10:32 PM IST
Highlights

ஒரே நேரத்தில் வானவேடிக்கைகள் நடைபெற்றதால், நகரின் பல பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது. சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு புகை சூழந்திருந்தது.

சென்னையில் பட்டாசு வெடிக்கும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. வானவேடிக்கைகளால் சென்னையில் புகை மூட்டம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் தீபாவளி திருநாள் இன்று கோலகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தமிழகத்திலும் பாதிப்பு தீபாவளிக்குப் பிறகுதான் குறைய ஆரம்பித்தது. மேலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பாலும் மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு தீபாவளி களையிழந்தது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதாலும் பொருளாதார நடவடிக்கைகள் சூடுபிடித்திருப்பதாலும் வழக்கம்போல் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை நாட்டு மக்கள் கொண்டாடிவருகிறார்கள். 

தமிழகத்திலும் வழக்கம்போல் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைவிட இனிப்புகள், பட்டாசுகள் விற்பனையும் இந்த ஆண்டு அதிகரித்தது. தீபாவளி பண்டிக்கைக்கு பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாட்டை அறிவித்திருந்தது. இதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு காலை 6 - 7 மணி; இரவில் 7 - 8 மணி என இரண்டு மணி நேரம் பட்டாசுகள் வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும் விதிமுறையை மீறி பட்டாசுகள் வெடித்தாலோ சரவெடி, பேரியம் கலந்த பட்டாசுகளை வெடித்தாலோ குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் விடியற்காலை முதலே வெடிச்சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியது. பல இடங்களில் விதிமுறையை மீறியும் நேரக்கட்டுப்பாட்டை மீறியும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. பகல் முழுவதுமே பட்டாசு சத்தம் கேட்டப்படி இருந்தது. கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை பெய்த நிலையில், தீபாவளி திருநாளான இன்று ஓய்ந்திருந்தது. எனவே, பட்டாசுகள் வெடிப்பதும் அதிகரித்து காணப்பட்டது. மாலை 7 மணிக்கு மேல்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று நேரக்கட்டுப்பாடு இருந்தபோதும், 6 மணி முதலே சென்னையில் வானவேடிக்கைகள் களைக் கட்டத் தொடங்கின.

திரும்பிய பக்கமெல்லாம் பட்டாசு சத்தமும் வானவேடிக்கைகளையும் காண முடிந்தது. ஒரே நேரத்தில் வானவேடிக்கைகள் நடைபெற்றதால், நகரின் பல பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது. சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு புகை சூழந்திருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டனர். இதற்கிடையே விதிமுறை மீறி பட்டாசுகளை வெடிப்போரை போலீஸார் கண்காணித்து வந்தனர். விதிமுறையை மீறி பட்டாசுகள் வெடித்த 22-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

tags
click me!