
சமீபத்தில் திறக்கப்பட்ட தெற்கு உஸ்மான் ரோடு – சி.ஐ.டி நகர் மேம்பாலத்தை ஒருமுறை பார்த்தாலே “இது நம்ம சென்னை தானா… இல்ல சிங்கப்பூர் தானா?” என்று யாரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. நம்ம கண்முன்னே ஒரு நகரம் எவ்வளவு வேகமாக வளர முடியும் என்பதற்கான உதாரணம் தற்போது தி.நகரில்தான்.
சுகுமார் வெளியிட்ட வீடியோ
இதுபற்றி திரைப்பட நடிகர் காதல் சுகுமார் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வாவ் நாம சென்னையிலதானா இருக்கோம்... இல்ல சிங்கப்பூரிலா என வியக்கும் அளவுக்கு ஒரு மேம்பாலம். மக்களே மொத்தமும் நம்ம வரிப்பணத்தில் கட்டியதுதான் என பெருமிதம் கொள்ளும் தருணம்.. கெத்தா நாம சொல்லிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
அசத்தும் சென்னையின் பாலம்
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்போன தி.நகர் - உஸ்மான் ரோடு, தினமும் 10 லட்சம் மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலை ஆகும். இந்த இடத்தின் சாலைகளில் நிற்கவே இடமில்லாமல் கார்கள், இருசக்கர வாகனங்கள் நெரிசல் ஏற்படுவது வழக்கம். அந்த நெரிசலை குறைக்கவும், மக்கள் வேகமாக நகரச் செல்லவும் இந்த புதிய மேம்பாலம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது.
உயரமான சாலை
புதிய மேம்பாலம் மட்டும் 1.2 கி.மீ நீளம் கொண்டது. இது தெற்கு உஸ்மான் ரோடு மற்றும் சி.ஐ.டி நகர் ரோடு ஆகியவற்றை நேரடியாக இணைக்கிறது. இதை ஏற்கனவே 0.8 கி.மீ மேம்பாலத்துடன் இணைத்ததால், இப்போது தி.நகரில் மொத்தம் 2 கிலோமீட்டர் நீளமான தொடர்ச்சியான எலிவேட்டட் ரோடு உருவாக்கப்பட்டுள்ளது. தி.நகர் – கோடம்பாக்கம், தி.நகர் – நுங்கம்பாக்கம், அண்ணா சாலை இணைப்பு போன்ற முக்கிய போக்குவரத்து புள்ளிகளை நேரடியாக இணைக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலுக்கு பெரிய நிவாரணம்
முன்பு உஸ்மான் ரோடு சந்திப்புகளில் 10–15 நிமிடம் நின்று சிக்னல் கடக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது மேம்பாலம் திறக்கப்பட்டதால் சிக்னல் நெரிசல் குறைவு, பயண நேரம் 40% வரை குறைவு, அவசர சேவைகளுக்கு வேகமான பாதை போன்ற பல மாற்றங்கள் கண்கூடாக தெரிகின்றன. வணிகப் பகுதிகளில் உள்ள வாகன அழுத்தத்தை இது பெரிய அளவில் குறைக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் தி.நகரைச் சுற்றியுள்ள போக்குவரத்து தற்போது சீரானதாக இருக்கும்.
சிங்கப்பூர் லுக் தரும் LED விளக்குகள்
புதிய மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட அழகான LED லைட்கள், சிமெண்ட் பிளாட் ஃபினிஷிங், தூய்மையான பாதை மற்றும் இரவு நேரங்கள் லைட்டிங்—அனைத்தும் இணைந்து ஒரு நவீன நகர தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அதனால்தான் பலரும் இதை “சென்னையா இல்லை சிங்கப்பூரா” என்று கூறுகிறார்கள் இந்த பாலத்தில் பயணித்தவர்கள்.