
TVK legal team meeting : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கடந்த மாதம் மிகவும் இக்கட்டான ஒன்றாகவே அமைந்தது. கரூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிய வழங்கிய விஜய், கடந்த வாரம் அவர்களை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு வர வைத்து ஆறுதல் கூறினார்.
இந்த கரூர் சம்பவத்தை தொடர்ந்து அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறார் விஜய். இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தின் இன்று அக்கட்சி வழக்கறிஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தவெகவின் மண்டல மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணியின் ஒருங்கிணைப்பாளர்கள் சுமார் 250 பேர் கலந்துகொண்டனர்.
மேலும் வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், CTR.நிர்மல்குமார், வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் பங்கேற்று உள்ளனர். இந்தக் கூட்டத்தில் கட்சியினர் மீது பதியப்படும் வழக்குகள், சிக்கல்கள் உள்ளிட்டவற்றை திறம்பட கையாளுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளவில்லை. விரைவில் அரசியலில் விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த அறிவிப்பு வெளிவரவும் வாய்ப்பு உள்ளது. விஜய் மீண்டும் தன்னுடைய சுற்றுப் பயணத்தை எப்போது தொடங்க உள்ளார் என்பதையும் தவெக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.