
சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 10 முதல் 15 மீட்டர் அளவுக்கு திடீரென கடல் உள்வாங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் போகவில்லை. அதனால் இயல்பாகவே கடலில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித பீதி பற்றி கொள்கிறது. மேலும் அடிக்கடி கடல் நீர் உள் வாங்கும்போதெல்லாம் அது சுனாமியாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகமும் சேர்ந்துவிடுகிறது. அப்படித்தான் நேற்று நள்ளிரவு சென்னை மெரினாவில் நடந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென 10-15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியது. இதனால் மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டது. நள்ளிரவில் பீச்சுக்கு வந்திருந்த மக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பிறகு சுமார் அரை மணிநேரத்திற்கு பிறகு கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுமோ என்ற ஐயம் ஏற்பட்ட நிலையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என இந்திய சுனாமி மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில் கடல் திடீரென உள்வாங்கிய சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதன்தாக்கம் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.